தீபமலையில் பக்தர்கள் இறங்கும் பாதையில் தீ வைத்த மர்மநபர்கள்

திருவண்ணாமலை தீபமலையில் பக்தர்கள் இறங்கும் பாதையில் மர்மநபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-06 17:50 GMT

திருவண்ணாமலை,

.திருவண்ணாமலை மகாதீபத்திருவிழா நேற்று நடந்தது. 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மலையேறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. காலை முதல் பிற்பகல் 2 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பிரத்யேகமாக அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டும் வழங்கப்பட்டிருந்தது.

மலையேறுபவர்கள் பட்டாசு, கற்பூரம் உள்ளிட்ட தீ பிடிக்கக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. தீவிர சோதனைக்கு பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து பக்தர்கள் மலையில் இருந்து இறங்க தொடங்கினர். இருளில் பலர் டார்ச் ஒளியிலும், செல்போன் டார்ச் ஒளியிலும் மெதுவாக இறங்கினர். அவர்களுக்கு போலீசார் உதவி செய்தனர்.

பக்தர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் பக்தர்கள் இறங்கும் பாதையில் மர்மநபர்கள் தீ வைத்தனர். மலையில் காய்ந்திருந்த செடி கொடிகள் அந்த தீயில் பற்றி மளமளவென எரிந்தது. இதைப்பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியுடன் கூடிய அச்சத்தில் உறைந்தனர். இதனையடுத்துபக்தர்கள் மாற்றுப்பாதையில் கீழே இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மலையில் மர்ம நபர்கள் வைத்த தீயினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபடும் போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்