மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லும் மர்ம நபர்கள்
கம்பம் புறவழிச்சாலை பகுதியில் மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மருத்துவ கழிவுகள்
கம்பம் அருகே புதுப்பட்டி-கூடலூர் புறவழிச்சாலையில் கம்பம்மெட்டு பிரிவு அருகே சாலையோரத்தில் மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர்.
அதில் காலாவதியான ஊசி மருந்துகள், மருந்து பாட்டில்கள், காலாவதியான மாத்திரைகள் குவிந்து கிடக்கின்றன. இவையில்லாமல் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், கழிவு பஞ்சு, கையுறைகள் மற்றும் மருந்துபாட்டில்கள் ஆங்காங்கே விளைநிலங்களில் கிடக்கிறது.
தொற்றுநோய் அபாயம்
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு தரிசு நிலங்களில் மேயவிடப்படும் ஆடு, மாடுகள் மருத்துவ கழிவுகளை தின்பதால் நோயால் பாதிக்கப்படுகிறது.
இதனை தடுக்க ஆஸ்பத்திரிகளில் மருத்துவ கழிவுகளை சில தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் உயர்வெப்ப நிலையில் எரிக்கும் முறையிலும், மறு சுழற்சி முறையிலும் அழிக்கப்படுகிறது.
ஆனால் இதற்கு செலவாகும் என்பதால், பயன்படுத்திய மருந்துகள், மருத்துவ கழிவுகளை இரவு நேரங்களில் கம்பம் புறநகர் பகுதியில் சாலையோரங்களில் மர்ம நபர்கள் கொட்டி செல்வதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
எனவே ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.