சாத்தான்குளம் அருகே மாயமான 2 கல்லூரி மாணவிகள் மதுரையில் மீட்பு
சாத்தான்குளம் அருகே மாயமான 2 கல்லூரி மாணவிகள் மதுரையில் மீட்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே மாயமான 2 கல்லூரி மாணவிகள் மதுரையில் மீட்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
கல்லூரி மாணவிகள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த பண்டாரபுரத்தைச் சேர்ந்தவர் அச்சுதன் மகள் கார்த்திகா (வயது 19). சாத்தான்குளம் அருகே கொழுந்தட்டு மேல தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட் செல்வன் மகள் ஹெட்சிபா செல்வகுமாரி (20).
தோழிகளான இவர்கள் 2 பேரும் சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர். கடந்த 23-ந்தேதி ஹெட்சிபா செல்வகுமாரி கல்லூரிக்கு செல்வதாகவும், கார்த்திகா வங்கிக்கு செல்வதாகவும் தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்றனர்.
தனிப்படை போலீசார்
பின்னர் 2 மாணவிகளும் தங்களது வீடுகளுக்கு திரும்பி செல்லாமல் மாயமானார்கள். அவர்களது செல்போன்களும் சுவிட்சு-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடமும் மாணவிகளின் குடும்பத்தினர் முறையிட்டு புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கேடஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மாணவிகளை தேடி வந்தனர்.
மீட்பு
சாத்தான்குளம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மாணவிகளின் செல்போன்களின் சிக்னல்களையும் கண்காணித்து வந்தனர்.
இதில் மாணவிகள் கார்த்திகா, ஹெட்சிபா செல்வகுமாரி ஆகிய 2 பேரும் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், 2 மாணவிகளையும் மீட்டு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
ஒன்றாக சேர்ந்து வாழ...
அங்கு 2 மாணவிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. விசாரணையில் மாணவிகள் கூறும்போது, ''நெருங்கிய தோழிகளான நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினோம். இதற்காக மதுரையில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து வேலை தேடி வந்தோம். அதற்குள் போலீசார் எங்களை மீட்டு அழைத்து வந்தனர்'' என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்களை போலீசார் வரவழைத்தனர். மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சாத்தான்குளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.