கூட்டுறவு சார்பதிவாளர் மர்ம சாவு
சின்னமனூரில் தங்கும் விடுதியில் கூட்டுறவு சார்பதிவாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கூட்டுறவு சார்பதிவாளர்
தேனி மாவட்டம் சின்னமனூர் தலையாரி ராமசாமி தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 45). திருமணம் ஆகாதவர். இவர் கம்பம் கூட்டுறவு சங்கத்தில் சார்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக ராஜாராம் சின்னமனூரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி கம்பத்திற்கு சென்று வந்தார்.
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக விடுதியில் அவர் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் தங்கும் விடுதி பணியாளர்கள், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் ராஜாராம் உறவினர்கள் அங்கு வந்தனர். பின்னர் தங்கும் விடுதி பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராஜாராம் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து சின்னமனூர் ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து ராஜாராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராம் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு சார்பதிவாளர் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சின்னமனூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.