மாயமான கல்லூரி ஊழியர் பிணமாக மீட்பு
பெரம்பலூர் அருகே மாயமான கல்லூரி ஊழியர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கில் தொங்கிய நிலையில்...
பெரம்பலூர்-துறையூர் சாலையில் தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள அரணாரை பெரிய ஏரியில் வேப்பமரம் ஒன்று உள்ளது. இதில் நேற்று மதியம் ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அந்தப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் கேட்பாரற்ற நிலையில் மொபட்டும் நின்று கொண்டிருந்தது. இதனைக்கண்ட அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவரின் உடலையும், மொபட்டையும் பார்வையிட்டு இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
11-ந்தேதி முதல் காணவில்லை
விசாரணையில், கடந்த 11-ந்தேதி இரவு காணாமல்போன அரணாரை அறிஞர் அண்ணாதெருவை சேர்ந்த ஜோதிவேலின் மகன் மதியழகன்(வயது 21) என்பது தெரியவந்தது. அவர் டிப்ளமோ ஆட்டோ மொபைல்ஸ் படித்து முடித்துவிட்டு பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு மதியழகன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை அவரது தந்தை ஜோதிவேல் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மதியழகன் அன்றைய இரவே தனது மொபட்டை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
சந்தேக மரணம்
ஆனால், மறுநாளும் மதியழகன் வீட்டிற்கு வராததால் அவரது அண்ணன் மாரியப்பன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மதியழகனை தேடி வந்தனர். இந்த நிலையில் மதியழகன் அரணாரை பெரிய ஏரியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதியழகனின் குடும்பத்தினர், உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து மதியழகனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சந்தேக மரணம் என்று மாற்றி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.