சென்னை விருகம்பாக்கத்தில் தற்கொலை செய்த நடிகையின் மாயமான செல்போன் மீட்பு

தற்கொலை செய்த நடிகையின் மாயமான விலை உயர்ந்த செல்போன் மீட்கப்பட்டது. தயாரிப்பாளரிடம் விசாரிக்க போலீசார் தயங்குவதாக நடிகையின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-23 23:39 GMT

பூந்தமல்லி,

'வாய்தா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29). இவர், சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். கடந்த வாரம் தனது வீட்டில் நடிகை பவுலின் ஜெசிகா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நடிகையின் செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும் தெரிந்தது.

செல்போன் மாயம்

இந்தநிலையில் நடிகை பவுலின் ஜெசிகா பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போன் மாயமானதாக அவரது அண்ணன் போலீசில் புகார் செய்து இருந்தார். நடிகை தற்கொலை செய்த அன்று, சிராஜூதீன் கூறியதன்பேரில் அவரது நண்பரான பிரபாகரன் என்பவர்தான் முதலில் பவுலின் ஜெசிகா வீட்டுக்கு வந்து சென்றார் என்பதால் அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்தான் நடிகை வீட்டில் இருந்து செல்போனை எடுத்துச்சென்றது தெரிந்தது. அவரிடம் இருந்து அந்த ஐ-போன் மீட்கப்பட்டது. நடிகை பவுலின் ஜெசிகாவுக்கு அந்த செல்போனை சிராஜூதீன் வாங்கி கொடுத்தார் என்பதால் அதனை எடுத்துச்சென்றதாக போலீசாரிடம் பிரபாகரன் தெரிவித்தார்.

தடயவியல் சோதனை

அந்த செல்போனில் தற்கொலைக்கு முன்பாக நடிகை பவுலின் ஜெசிகா பேசிய ஆடியோ, வீடியோக்கள் அழிக்கப்பட்டு உள்ளனவா? என்பதை கண்டறிய அந்த செல்போனை தடயவியல் சோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

நடிகை தற்கொலை செய்து ஒரு வாரம் ஆன நிலையில் அவரது காதலரான தயாரிப்பாளர் சிராஜூதீனிடம் போலீசார் இன்னும் விசாரிக்கவில்லை. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் தயங்குவதாக நடிகையின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

ஆனால் சிராஜூதீன் தற்போது கதாநாயகனாக நடித்து வருவதாகவும், காரைக்குடியில் நடக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு இருப்பதால் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னைக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகுவதாக சிராஜூதீன் கூறி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

திருமணத்துக்கு வற்புறுத்தினாரா?

சிராஜூதீனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில்தான் அவர் நடிகையை காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே நடிகை பவுலின் ஜெசிகா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் சிராஜூதீனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிராஜூதீனிடம் விசாரணை நடத்திய பிறகுதான் நடிகை தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்