நாம் அனைவரும் ஆன்மீகம் என்ற ஒரே இழையோடு ஒன்றி பிணைக்கப்பட்டிருக்கிறோம்-உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்

ராமேசுவரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு விவேகானந்தர் நினைவு இல்லத்தை அமித்ஷா பார்வையிட்டார்.

Update: 2023-07-29 12:06 GMT

Image Courtesy:Twitter@AmitShah

ராமேசுவரம்,

'என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்' என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 168 நாட்கள் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பயணம் நடைபெற உள்ளது.

இந்த நடைபயண தொடக்க விழா நேற்று மாலையில் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள திடலில் நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விழாவில் கலந்து கொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு ராமேசுவரத்தில் ஓட்டல் ஒன்றில் அமித்ஷா, அண்ணாமலை தங்கினர்.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா ராமேசுவரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசாமி கோவிலுக்கு இன்று அதிகாலை 5.30 மணியளவில் சென்று சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் நாம் அனைவரும் ஆன்மீகம் என்ற ஒரே இழையோடு ஒன்றி பிணைக்கப்பட்டிருக்கிறோம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

சுவாமி விவேகானந்தரின் தெய்வீக ஞானத்தின் அருளால் அருளப்பட்ட புனித ஸ்தலமான ராமேசுவரத்தில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தை பார்வையிட்டேன். இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும், நாம் அனைவரும் ஆன்மீகம் என்ற ஒரே இழையோடு ஒன்றி பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

இந்தியாவை ஒரு புதிய ஆன்மீக மறுமலர்ச்சிக்கு விழித்தெழுப்பிய மகா துறவிக்கு எனது வணக்கத்தை செலுத்தினேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்