'என் குப்பை என் பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி
‘என் குப்பை என் பொறுப்பு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி
குன்னூர்
தமிழகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் வகையில் நகரங்களில் மக்கள் பங்கேற்புடன் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பங்கேற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக குன்னூரில் உள்ள பள்ளிகளில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கோபால கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மால்முருகன், சித்தநாதன் ஆகியோர் கலந்துகொண்டு குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் நகராட்சி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.