நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டு மனு

ராமேசுவரத்தில் மீனவ பெண் கூட்டு பலாத்கார கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Update: 2022-07-04 15:20 GMT

ராமநாதபுரம், 

ராமேசுவரத்தில் மீனவ பெண் கூட்டு பலாத்கார கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

பலாத்காரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வடகாடு கிராமத்தில் இருந்து கடந்த மே மாதம் 24-ந் தேதி அன்று கடலில் பாசி சேகரிக்க சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மீனவ பெண் சந்திராவை இரால் பண்ணையில் வேலை பார்த்த வடமாநில இளைஞர்கள் 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி, ராமேசுவரம் நிர்வாகிகள் வெங்கடேஸ்வரி, ஆரோக்கிய நிர்மலா உள்ளிட்ட பெண்கள் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

பின்னர் இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனு

போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னர் அனைவரும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசனிடம் மனு கொடுத்து விட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்