முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது
செரியலூர்- கரம்பக்காடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. சுற்றுவட்டார கிராமமக்கள் சீர் கொண்டு வந்து மொய் எழுதினார்கள்.
கீரமங்கலம்:
இன்று கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே செரியலூர்- கரம்பக்காடு கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கிராம மக்கள், நன்கொடையாளர்களின் உதவியுடன் கோவில் கல்மண்டபம், பிரமாண்ட ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கான சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் முழுமை நிறைவடைந்தது. இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 5 இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகளும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
அமைச்சர் குத்துவிளக்கு ஏற்றினார்
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடக்கும் நிலையில் கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்த பிறகு கடந்த 6-ந் தேதி யாகசாலை பூஜைகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 41 சிவாச்சாரியார்களால் புனித நீர் வைக்கப்பட்டு யாகபூஜைகள் நடத்தப்பட்டது.
செரியலூர்- கரம்பக்காடு கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் மேளதாளங்களுடன் நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் சீர் கொண்டு வந்ததோடு மொய் எழுதினார்கள். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சுமார் 50 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.