காணைமுத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
காணை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும், ஆடி திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியோற்றதுடன் தொடங்கியது. அதை தொடா்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சாமி வீதிஉலா நடந்தது.
விழாவின் சிகர திருவிழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலையில், உற்சவ மாரியம்மன், விநாயகர், முருகன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
தேரோட்டம்
அதைத்தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளில் வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது.
அதன் பிறகு உற்சவ மாரியம்மன், விநாயர், முருகன் மற்றும் மூலவருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் காணை உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.