தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு நிதி குறைப்பு:மத்திய அரசை கண்டித்து மார்ச் 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்முத்தரசன் பேட்டி

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து மார்ச் 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2023-02-09 18:45 GMT


மாநிலக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தேசிய துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் பாஸ்கர், மாநில பொருளாளர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அப்பாவு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் நன்றி கூறினார்.

கூட்டம் முடிந்ததும் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்ஜெட்டில் நிதிகுறைப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி உறுதியாகிவிட்டது. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது தான் தெரியவேண்டும். மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு 33 சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கான அரசு என பிரதமர் பொய் சொல்கிறார். மத்திய அரசு அம்பானி, அதானியை பாதுகாத்து வருகிறது. லாபத்தில் இயங்கி வரும் 13 பொதுத்துறை நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள்.

ஆர்ப்பாட்டம்

டெல்டா பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.20 ஆயிரம் நிவாரணத்தொகையை ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் கடிதம் எழுதியதை மத்திய அரசு ஏற்று கொள்ள வேண்டும்.

தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய கணக்கீடு செய்ய வேண்டும். புதிய பயிர்காப்பீடு பதிவு செய்து மத்திய, மாநில அரசு உரிய இழப்பீடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்திற்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்