முத்தாரம்மன் கோவில் கொடை விழா
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு 7-ந் தேதி இரவு அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு சந்தன அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு தீர்த்தம், பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 11 மணியளவில் முத்தாரம்மன் கோவிலில் இருந்து உச்சினிமாகாளியம்மன் கோவிலுக்கும், வெயிலுகந்தம்மன் கோவிலுக்கும் தட்டு பிரசாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளி அங்கி சாத்திய பின்னர் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கொடை விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.