ஈச்சம்பாடி அணையின் வலதுபுற கால்வாயை தூர் வார வேண்டும்
ஈச்சம்பாடி அணையின் வலதுபுற கால்வாயை தூர்வார வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
ஈச்சம்பாடி அணையின் வலதுபுற கால்வாயை தூர்வார வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை தாங்கினார். இதில் வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) முகமது அஸ்லாம், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் இளங்கோவன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சவுமியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி, வேளாண் வணிகத் துணை இயக்குனர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களிலும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் மருந்துகள் இருப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள். எனவே கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்து வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கறவை மாடு கடன் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு இழப்பீடு
கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எரிந்து சேதம் அடைந்தது. இந்த திட்டத்திற்காக கரும்பு விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட தொகையை விவசாயிகளுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் ரூ.25 ஆயிரம் வாடகை வழங்க வேண்டும். ஈச்சம்பாடி அணையின் வலது புறக்கால்வாயை தூர் வரவேண்டும். மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா பேசுகையில், கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ள பல்வேறு கோரிக்கைகள், கருத்துக்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.