ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-22 18:45 GMT

முஸ்லிம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகை ரமலான் மாத இறுதியில் (பிறை தெரிவதை கணக்கிட்டு) கொண்டாடப்படுகிறது. எனவே இஸ்லாமிய மாதங்களில் இந்த ரமலான் மாதம் புனிதமிக்க மாதமாக கருதப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகையை நேற்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள், அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகளை அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர். சிறுவர், சிறுமிகளும் விதவிதமான ஆடைகளை அணிந்தபடி தொழுகையில் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி-மூங்கில்துறைப்பட்டு

ரம்ஜான் பண்டிகையொட்டி முஸ்லிம்கள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக ஊர்வலமாக கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஈத்கா பள்ளி வாசல் மைதானத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மோரை பாதையில் உள்ள மைதானத்தில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான வடகீரனூர், வடபொன்பரப்பி, லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பேட்டை, ராவத்தநல்லூர் பவுஞ்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தர்காவில் நேற்று காலை 8 மணி அளவில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

சங்கராபுரம்-திருக்கோவிலூர்

சங்கராபுரத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சங்கராபுரத்தில் உள்ள மக்கா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல், ஜாமியா பள்ளிவாசல், மஜிதுல் நவபி பள்ளிவாசல், மஜிகே உஸ்மான் பள்ளிவாசல்களை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று தேவபாண்டலம், ராமராஜபுரம், வடசேமபாளையம், மூரார்பாளையம், பூட்டை, பாலப்பட்டு ஆகிய கிராமங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள மசூதியில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு சந்தைப்பேட்டை சங்கராபுரம் ரோட்டில் உள்ள அஞ்சுமூன் பள்ளிவாசலை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து சந்தப்பேட்டை நல்ல தண்ணி குளம் அருகில் உள்ள ஈக்தா மைதானத்தை வந்தடைந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் புனித ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகையை மௌலானா முன் நின்று நடத்தினார். இதில் திருக்கோவிலூர், சந்தப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்