பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.
ஈரோடு
பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.
கோபி
ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடந்தது. மேலும் நண்பர்கள், உறவினர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
கோபி முத்துசாவீதியில் உள்ள ஈதுகா பள்ளிவாசல், நல்லகவுண்டன்பாளையம், கலிங்கியம், ஜெயதுர்க்கை நகர், சாமிநாதபுரம் உள்பட 13 இடங்களில் பள்ளிவாசல்களில் முஸ்லிம்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. இதையொட்டி ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அந்தியூரில் உள்ள மசூதியில் சிறப்பு தொழுகை காலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. சிறப்பு தொழுகையை அசரத் கலந்து கொண்டு நடத்தினார். இதில் ஏராளமான சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். குர்பானியும் கொடுக்கப்பட்டது. அந்தியூரில் நடந்த சிறப்பு தொழுகையில் கரட்டுப்பாளையம், ஜெ.ஜெ.நகர் பகுதியில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பெண்கள் அவரவர் வீட்டில் தொழுகை நடத்தினார்கள். இதையொட்டி மசூதி முன்பு அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெரிய பள்ளிவாசலில் இருந்து கடைவீதி வழியாக கோட்டுவீராம்பாளையம் சென்று ஈத்கா மைதானத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்டமான பந்தலில் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்த ஆண்டு நேற்று முன்தினம் காலையில் இரவு வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் நேற்று வழக்கமாக நடைபெறும் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக காலை 7 மணி அளவில் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடைவீதியில் உள்ள பள்ளிவாசல், பஸ் நிலையம், பெரியகுளம் செல்லும் வழியில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
கொடுமுடி
கொடுமுடி சுல்தான்பேட்டையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அபுபக்கர் தலைமையில் ஹஜ்ரத்துகள் யாசின் மற்றும் சாதிக் ஆகியோர் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டார்கள்.