கீழடி அருங்காட்சியகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்

கீழடி அருங்காட்சியகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

Update: 2023-04-04 18:45 GMT

திருப்புவனம், ஏப்.5-

கீழடி அருங்காட்சியகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

அமைச்சர் பார்வையிட்டார்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.18.42 கோடி செலவில் 2 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த தொல்பொருள் அருங்காட்சியகம் 10 கட்டிடங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் 6 கட்டிடங்களில் இரண்டு தளங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை தினமும் ஏராளமான மக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் பற்றிய விவரங்களை தொல்லியல் துறை கீழடி உதவி இயக்குனர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கினர்.

மகிழ்ச்சி

பின்பு நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 5-ந் தேதி நேரில் வந்து திறந்து வைத்தார். இதன்மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் எப்படி நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. இதை பார்வையிட்டதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன், என்றார். இதையடுத்து அவர் மதுரை புறப்பட்டு வந்தார்.

அப்போது, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

கொரோனா பாதிப்பில்லை

பின்னர் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய மத்திய அரசு கூறி உள்ளது. தற்போது வரை இந்த நடைமுறைதான் தொடர்ந்து வருகிறது. புதிதாக எதுவும் அறிவுறுத்தப்பட்டால் அதை பின்பற்றுவோம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூட மதுரை, சென்னை, கோவை, திருச்சி ஆகிய விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்கு சோதனை மேற்கொண்டதில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

தற்போது பரவி வரும் கொரோனாவால், பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. இணை நோய் உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.

ராமநாதபுரத்தில் படித்தாலாவது எய்ம்ஸ் என்கிற ஒன்றை, தமிழகத்தில் உறுதிப்படுத்துவார்கள் என்கிற நினைப்பில்தான் முதல்-அமைச்சர், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் அந்த மாணவர்களை அனுமதிக்க செய்தார். காலம் கடந்தாவது எய்ம்ஸ் வந்தால் மகிழ்ச்சிதான்

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்