முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
சேலத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி உத்திரம்
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பங்குனி உத்திரமான நேற்று தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி சாமி கோவிலில் காலை உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காவடி பழனியாண்டவர்
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோமாதா பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் 9 மணிக்கு காவடிகள் புறப்பாடு மற்றும் அருள்வாக்கு சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மாலையில் 1008 பால்குட ஊர்வலமும், 5.30 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. இதையொட்டி காவடி பழனியாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
அஸ்தம்பட்டி பாலசுப்பிரமணியசாமி
சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாப்பேட்டை குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. அம்மாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அஸ்தம்பட்டி கலைவாணர் தெருவில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மேலும் சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வீராணம் அருகே கொம்பேரிகாடு சுவாமிமலை சிவசக்தி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், ஊத்துமலை முருகன் கோவில், கந்தாஸ்ரமம் முருகன் கோவில், அடிவாரம் அறுபடை முருகன் கோவில் உள்பட சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.