வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர்
வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர் படுத்தப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் அவர் தனக்கு பரோல் வழங்கக்கோரி கடந்த 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜெயிலில் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து பழங்களை உட்கொண்டு வருகிறார். 22-வது நாளாக நேற்றும் முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஜெயில் காவலர்கள், பெண் ஜெயில் அலுவலர் கடந்த 2020-ம் ஆண்டு முருகன் அறையை சோதனை செய்தனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பெண் ஜெயில் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (ஜே.எம்.எண்-4) நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணைக்காக முருகன் பலத்த போலீஸ் காவலுடன் ஜெயிலில் இருந்து அழைத்து செல்லப்பட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ரோஸ்மேரி அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி முருகனை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். முருகன் பரோலுக்கு விண்ணப்பித்தபோது இந்த வழக்கை காரணம் காட்டி அவரின் மனுவை ஜெயில் நிர்வாகம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.