குடும்பம் நடத்த அழைத்த கணவர் கொலை: மனைவி- மாமியார் கைது

கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதை அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர்.

Update: 2024-02-19 11:01 GMT

கிருஷ்ணகிரி  

மனைவியும், மாமியாரும் தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே விமல்குமார் இறந்தது பிரேத பரிசோதனையில் உறுதி ஆனது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வடம் பலம்பட்டியை சேர்ந்தவர் விமல்குமார்(32) கார் டிரைவராக பணியாற்றினார். இவரது மனைவி பூர்ணமி (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதை அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர்.

தகராறு முற்றியதால் 4 ஆண்டுகளுக்கு முன்பு பூர்ணமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீடான கொடமாண்டப்பட்டிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று விமல்குமார் தனது தாயார் மகேஸ்வரியை அழைத்து கொண்டு கொடமாண்டப்பட்டி சென்றார். அப்போது தனது மனைவியிடம் என்னுடன் குடும்பம் நடத்த வா இல்லை என்றால் விவாகரத்து செய்து கொள் என தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பூர்ணமி, அவரது தாயார் அம்சவேணி ஆகியோர் கிரிக்கெட் மட்டையால் விமல்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த விமல்குமார் தனது தாயாருடன் போச்சம்பள்ளிக்கு திரும்பினார். அப்போது வழியில் விமல்குமாருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே மகனை மகேஸ்வரி எழுப்ப முயன்றார். ஆனால் விமல்குமார் இறந்து விட்டார்.

இது குறித்து மகேஸ்வரி போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விமல்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியும், மாமியாரும் தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே விமல்குமார் இறந்தது பிரேத பரிசோதனையில் உறுதி ஆனது. இதைத்தொடர்ந்து பூர்ணமி, அவரது தாயார் அம்சவேணி ஆகியோரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்