"எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கொன்றேன்"

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்தேன் என திருப்பூரில் இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலன் பகீர் வாக்குமூலம்

Update: 2023-09-06 12:02 GMT

திருப்பூர்

சந்தேகம் வலுக்க தொடங்கியதால், எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்தேன் என திருப்பூரில் இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முகநூல் கதல்

திருப்பூர் அவினாசியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மகள் சத்தியஸ்ரீ (வயது 21). திருப்பூர் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் கோவை சரவணம்பட்டியில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வரும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த நரேந்திரன் (21) என்பவருக்கும் முகநூல் மூலமாக காதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி ஆஸ்பத்திரியில் சத்தியஸ்ரீ பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த நநேரந்திரன் கத்தியால் சத்தியஸ்ரீயை குத்தியதுடன், அவருடைய கழுத்தை ஆடு அறுப்பது போல் அறுத்துக்கொன்றார். பின்னர் நரேந்திரன் கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இந்த கொலை தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மயக்க நிலையில் இருந்த நரேந்திரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் நரேந்திரன் பேச தொடங்கியதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான நரேந்திரன் போலீசாரிடம் அளித்தக்க வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

முதல் காதல் தோல்வி

எனக்கும் சத்தியஸ்ரீக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. நான் அவளை உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். மேலும் அடிக்கடி திருப்பூருக்கு வந்து சத்தியஸ்ரீ சந்தித்து மனம் விட்டு பேசி எனது அன்பையும், காதலையும் வெளிப்படுத்தி வந்தேன். தொடக்கத்தில் என்னிடம் மிகவும் அன்பாக பேசிய அவள், சமீப காலமாக என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள்.

இதனால் எங்களுக்குள் ஒரு இடைவெளி ஏற்பட்டது போன்று நான் உணர்ந்தேன். மேலும் அவள் வேறு யாரிடமாவது பேசி, பழகுகிறாளோ என்ற சந்தேகமும் எனக்கு ஏற்படத் தொடங்கியது. இதுகுறித்து நான் அவளிடம் கேட்டபோது எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரத் தொடங்கியது. ஒருகட்டத்தில் அவள் மீது எனக்கு ஏற்பட்ட சந்தேகம் வலுக்க தொடங்கியதால் சத்தியஸ்ரீ என்னை வெறுக்க தொடங்கினாள். மேலும் என்னிடம் பேசுவதையும், சந்திக்க வருவதையும் நிறுத்திக் கொள்ளுமாறு அவள் கூறியது எனக்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் 1-ந்தேதி சத்தியஸ்ரீயை சந்திக்க திருப்பூர் வந்தேன். அவள் வேலை செய்யும் மருத்துவமனை முன்பு அவளை சந்தித்து பேசினேன். அப்போது அவள் காதலை கைவிடுமாறு என்னிடம் கூறினாள். இதனால் எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவளது பேச்சு எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே மற்றொரு பெண்ணை காதலித்து காதல் தோல்வியடைந்த நிலையில் சத்தியஸ்ரீயின் காதலும் கைவிட்டு போய்விடுமோ? என்ற பயமும் எனக்கு உருவானது.

கொலை செய்தேன்

எனவே சத்தியஸ்ரீயை கொலை செய்து விட்டு, நானும் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக நான் போய் கத்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் அவள் வேலை செய்யும் மருத்துவமனைக்கு சென்றேன். அந்த நேரமும் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்தியஸ்ரீயை எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்தேன். நானும் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்.

இவ்வாறு நரேந்திரன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

------------------

Tags:    

மேலும் செய்திகள்