ராசிபுரம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் பெயிண்டர் கைது; பரபரப்பு வாக்குமூலம்

Update: 2023-06-07 19:00 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மின் ஊழியர் கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ருக்மணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் சுப்பிரமணி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

மேலும் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் பணியை கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சுப்பிரமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதையடுத்து புதுப்பட்டி ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் பெயிண்டர் அருண்குமார் (20) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் சுப்பிரமணியத்தை அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.

வாக்குமூலம்

பின்னர் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியின் வீடு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் அங்கு செல்லும் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சுப்பிரமணியின் வீட்டுக்கு அருகே இருந்து மதுகுடிப்பது வழக்கமாக இருந்து வந்தது. அதன்படி அருண்குமாரும் மது வாங்கி சுப்பிரமணியின் வீட்டின் முன் அமர்ந்து குடித்து வந்தார். அப்போது போதையில் வீட்டுக்குள் சென்று சுப்பிரமணியின் சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடி வந்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்கம்போல் அருண்குமார் சுப்பிரமணியின் வீட்டின் அருகே மது குடித்தார். பின்னர் போதையில் வீட்டுக்குள் சென்றவர் பணத்தை திருட முயன்றார். அப்போது சுப்பிரமணி கண் விழித்து பணத்தை திருடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார், அங்கிருந்த கட்டையால் அவரை அடித்துக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டார். அதன் பிறகு போலீசார் விசாரணை நடத்தி தன்னை கைது செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அருண்குமாரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்