மது அருந்தியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை
கும்பகோணத்தில், மது அருந்தியதை தட்டிக்கேட்ட முதியவரை கொலை செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தில், மது அருந்தியதை தட்டிக்கேட்ட முதியவரை கொலை செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிணமாக கிடந்த முதியவர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நத்தம் கருப்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 65). இவர், நேற்று காலை கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கும்பகோணம் கிழக்கு போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் கொலை
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரங்கள் வருமாறு:-
சம்பவத்தன்று ராஜேந்திரன் காந்தி பூங்கா அருகே சாலையோரத்தில் தூங்கி உள்ளார். அப்போது அங்கு 2 பேர் மது அருந்த வந்துள்ளனர். அவர்களை ராஜேந்திரன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ராஜேந்திரனை தாக்கி உள்ளனர். இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
2 பேர் கைது
இதுதொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவை சேர்ந்த பாலமுருகன்(32), ஜெயங்கூட்டுத்தை சேர்ந்த விக்னேஷ்(27) ஆகிய 2 பேரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் ராஜேந்திரனை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.