கொல்லிமலையில் பரபரப்பு: விவசாயி கல்லால் தாக்கி கொலை-நிலப்பிரச்சினையில் முதல் மனைவியின் மகன் வெறிச்செயல்
கொல்லிமலையில் நிலப்பிரச்சினையில் விவசாயி கல்லால் தாக்கிகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட முதல் மனைவியின் மகனை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்:
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் செங்காடுபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). விவசாயி. இவருடைய முதல் மனைவி லதா. இந்த தம்பதிக்கு ராஜ்குமார் (26) என்ற மகன் உள்ளார். செல்வராஜின் முதல் மனைவி லதா கடந்த 6 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டதால் அவர், பேபி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் கன்னிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
விவசாயி செல்வராஜூக்கு அந்த பகுதியில் 2¼ ஏக்கர் நிலம் இருந்தது. இதில் ஒரு ஏக்கர் நிலத்தை அவர் தனது முதல் மனைவியின் மகனான ராஜ்குமாருக்கு பிரித்து கொடுத்தார். ஆனால் ராஜ்குமார் தனக்கு கூடுதலாக நிலம் தர வேண்டும் என்றுக் கூறி, செல்வராஜிடம் தகராறில் ஈடுபட்டார்.
சமாதான பேச்சுவார்த்தை
கடந்த சில நாட்களுக்கு முன்பும் ராஜ்குமார் தனது தந்தையிடம் நிலம் தொடர்பாக மீண்டும் பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் அவர்கள் 2 பேரையும் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். அதன்பேரில் செல்வராஜ், தனது மனைவி பேபி, குழந்தை கன்னிகா ஸ்ரீயுடனும், ராஜ்குமார் தனது உறவினர்களுடனும் சென்றனர்.
அங்கு போலீசார் இரு தரப்பினருடனும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரும் போலீஸ் நிலையத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
கல்லால் தாக்குதல்
இந்த நிலையில் செல்வராஜ் தனது கிராமமான கீழ்செங்காடுபட்டிக்கு அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். இரவு 7 மணி அளவில் இந்த லாரி கொல்லிமலை 1-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது இருள் சூழ்ந்த பகுதியில் இருந்து ராஜ்குமார், தனது உறவினர்களான தினேஷ்குமார், ஹேம்நாத், சதீஷ்குமார் ஆகியோருடன் வெளியே வந்தார்.
அவர்கள் திடீரென லாரியை மறித்து, செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு கிடந்த கற்களால் செல்வராஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பரிதாப சாவு
ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் துடிதுடித்து கொண்டிருப்பதை பார்த்து பேபி கதறினார். உடனடியாக அவர் அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் செல்வராஜை மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பேபியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கல்லால் தாக்கிக்கொலை செய்யப்பட்ட செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் கைது
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜின் மகன் ராஜ்குமார் மற்றும் தினேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் ஹேம்நாத், சதீஷ்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நிலப்பிரச்சினை காரணமாக விவசாயியை, உறவினர்களுடன் சேர்ந்து மகனே கல்லால் தாக்கிக்கொலை செய்த சம்பவம் கொல்லிமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.