வீடு அருகே கள்ளக்காதலியை குடிவைத்த தொழிலாளி அடித்துக்கொலை-வெறிச்செயலில் ஈடுபட்ட அண்ணன் கைது

வீடு அருகே கள்ளக்காதலியை குடிவைத்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-22 16:17 GMT

தேன்கனிக்கோட்டை:

கள்ளக்காதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலை கிராமம் கலைஞர் குடியிருப்பை சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 56). இவருடைய தம்பி பசப்பா (37). இருவரும் கூலித்தொழிலாளிகள். பசப்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் திருமணமான 3 மாதத்தில் அவரை மனைவி பிரிந்து சென்றார்.

இதனிடையே பசப்பாவுக்கு, பெட்டமுகிலாளத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதனை அறிந்த ருத்ரப்பா, பசப்பாவை கண்டித்தார்.

மதுபோதையில் தகராறு

ஆனால் அதனை கண்டு கொள்ளாத பசப்பா, தனது கள்ளக்காதலியை ருத்ரப்பா வீடு அருகே குடிவைத்தார். இது ருத்ரப்பாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனிடையே பசப்பா அடிக்கடி மது குடித்து விட்டு வந்து, ருத்ரப்பாவிடம் பிரச்சினை செய்து வந்தார். மேலும் அவரை விரட்டி விட்டு, சொத்துகளை அபகரிக்க எண்ணி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பசப்பா மதுபோதையில் அண்ணன் வீட்டுக்கு சென்றார். அப்போது ருத்ரப்பா, கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பசப்பாவை கண்டித்தார். மேலும் கள்ளக்காதலியை தனது வீட்டின் அருகே குடியமர்த்தியது குறித்து கேட்டார். இதனால் பசப்பா ஆத்திரம் அடைந்தார்.

கடப்பாரையால் அடித்துக்கொலை

மேலும் அவர் ருத்ரப்பாவின் வீட்டின் ஓடுகள், கதவை கல்லால் அடித்து உடைத்தார். இதன் காரணமாக அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது ருத்ரப்பா அங்கிருந்த கட்டையால் பசப்பாவை தாக்கினார். இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

ஆனாலும் ஆத்திரம் அடங்காத ருத்ரப்பா, வீட்டில் இருந்த கடப்பாரையால் பசப்பாவின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில், அங்கேயே துடிதுடித்து பலியானார். இந்த பயங்கர சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அண்ணன் கைது

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ருத்ரப்பாவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், கள்ளக்காதலியை தனது வீட்டின் அருகே குடிவைத்த ஆத்திரத்தில் தம்பியை அடித்துக்கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட பசப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ருத்ரப்பா மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலியை தனது வீட்டின் அருகே குடிவைத்த தொழிலாளியை, அண்ணனே கடப்பாரையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்