மேச்சேரி அருகே, சொத்து தகராறில் தந்தை தாக்கியதில் காயமடைந்த மகன் சாவு-கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை
மேச்சேரி அருகே சொத்து தகராறில் தந்தை தாக்கியதில் காயமடைந்த மகன் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
மேச்சேரி:
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சொத்து தகராறு
மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக் காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 75). இவருடைய மகன் குமார் (54). தொழிலாளி.
இந்த நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் சொத்தை பிரிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று குமார் தனது தந்தை ராஜியிடம் சொத்தை பிரித்துக்கொடுக்கும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜி அங்கிருந்த கொடுவாளை எடுத்து குமார் கை மீது வெட்டி உள்ளார். மேலும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து குமாரின் தலையில் பலமாக அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் குமாரின் தந்தை ராஜி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாவு
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குமார் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மேச்சேரி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.