விடுதி குத்தகைதாரர் மீது காரை ஏற்றிக்கொலை
வேளாங்கண்ணியில் விடுதி குத்தகைதாரர், காரை ஏற்றிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கப்பல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணியில் விடுதி குத்தகைதாரர், காரை ஏற்றிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கப்பல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கப்பல் ஊழியர்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மகன் மதன்கார்த்திக் (வயது38). வேளாங்கண்ணி டீச்சர்ஸ் காலனி பார்வதிமந்திரம் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத்விக்டர் (36). இவர் கப்பலில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான விடுதியை மதன்கார்த்திக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
குத்தகை காலம் ஒரு ஆண்டு முடிந்த பிறகு விடுதியை மதன் கார்த்திக்கிடம் இருந்து வினோத்விக்டர் திருப்பி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கீழே தள்ளி விட்டதில் காயம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மதன்கார்த்திக், வினோத் விக்டர் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மதன்கார்த்திக், வினோத்விக்டரை கீழே தள்ளிவிட்டார். இதில் காயம் அடைந்த வினோத்விக்டரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அன்று இரவு நாகையில் இருந்து வினோத்விக்டர், அவருடைய மனைவி மரியரூபீனா மார்ட்டினா ஆகிய இருவரும் காரில் வேளாங்கண்ணிக்கு வந்தனர். காரை வேளாங்கண்ணியை சேர்ந்த ஆல்வின் என்பவர் ஓட்டினார்.
காரைக்கொண்டு மோதல்
வேளாங்கண்ணி சுனாமி நினைவு தூண் அருகே மதன்கார்த்திக், அவருடைய நண்பர் செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அமுதன் ஆகியோர் சேர்ந்து வினேத்விக்டர் காரை வழிமறித்தனர். இதையடுத்து டிரைவர் ஆல்வின் காரைவிட்டு கீழே இறங்கி விட்டார். பின்னர் மதன்கார்த்திக் மற்றும் சிலர் கார் கண்ணாடியை உடைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்விக்டர் உடனடியாக அங்கிருந்து காரை ஓட்டிச்சென்றார். வேளாங்கண்ணி மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது மதன்கார்த்திக், அமுதன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் காரை முந்தி சென்று வழிமறித்து மீண்டும் தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த வினோத்விக்டர் காரைக்கொண்டு அமுதன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த மதன்கார்த்திக், அமுதன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
கொலை வழக்கில் கைது
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மதன் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
அமுதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வினோத் விக்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதி குத்தகைதாரர் காரை ஏற்றி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.