தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் ஊழியரை கழுத்தை அறுத்து படுகொலை

திருப்பூரில் தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் ஊழியரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.

Update: 2023-09-01 18:44 GMT

திருப்பூரில் தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் ஊழியரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆஸ்பத்திரி வரவேற்பாளர்

திருப்பூர் மாவட்டம் அவினாசி பி.எஸ்.சுந்தரம் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகள் சத்தியஸ்ரீ (வயது 21). இவர் திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு ஜே.ஜி.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதங்களாக வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை சத்தியஸ்ரீ வழக்கம் போல் ஆஸ்பத்திரிக்கு வந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். காலை 10 மணி அளவில் வாலிபர் ஒருவர் அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தார். திடீரென அவர் சத்தியஸ்ரீயிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்தியஸ்ரீயின் வயிற்றில் சரமாரியாக குத்தியதுடன், கழுத்தையும் அறுத்தார். பின்னர் அந்த வாலிபர் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

முகநூல் மூலம் காதல்

இதனை பார்த்ததும் அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்தியஸ்ரீயை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சத்தியஸ்ரீயின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். அங்கு உறவினர்கள் பலரும் குவிந்தனர். மேலும் அந்த வாலிபரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சத்தியஸ்ரீக்கு முகநூல் மூலமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த நரேந்திரன் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்ததாக தெரிகிறது. நரேந்திரன் கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் தங்கியிருந்து கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காதல் விவகாரம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு காட்டுமன்னார்கோவிலில் இருந்து நரேந்திரன் திருப்பூர் வந்துள்ளார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சத்தியஸ்ரீயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு கத்தியால் அவரை குத்தி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் ஊழியரை கொலை செய்து விட்டு வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்