ஆண்கள் மட்டுமே பங்குபெற்ற முனியப்பசாமி கோவில் திருவிழா

மணப்பாறை அருகே ஆண்கள் மட்டுமே பங்கு பெற்ற முனியப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2022-06-29 20:20 GMT

மணப்பாறை, ஜூன்.30-

மணப்பாறை அருகே ஆண்கள் மட்டுமே பங்கு பெற்ற முனியப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

முனியப்பசாமி கோவில் திருவிழா

மணப்பாறையை அடுத்த ஆணையூரில் கரை முனியப்ப சாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவு கொடுக்கும் திருவிழா நடைபெறும்.

சுண்டக்காம்பட்டி, கருமகவுண்டம்பட்டி, ஆணையூர் உள்ளிட்ட 3 கிராம ஊர் நாட்டாண்மைகள் முன்னிலையில் கிராம மக்கள் சார்பில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறினால் ஆடுகளை நேர்த்திக்கடனாக விடுவார்கள். வேண்டுதல் நிறைவேறிய பின் எந்த பகுதியில் உள்ளார்களோ அந்த பகுதியில் இருந்து ஆடுகளை வாங்கி கோவிலுக்காக நேர்ந்து விட்டு விடுவார்கள்.

ஆண்களுக்கு மட்டுமே அனுமதி

பின்னர் திருவிழாவின் போது ஆடுகளை பிடித்து கோவிலுக்கு கொண்டு வருவார்கள். இந்த விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முனியப்பசாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதன் பின்னர் நள்ளிரவில் ஒரு ஆட்டை கரை முனியப்பனுக்கு பலியிட்டு காவு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு. இதனால் ஏராளமான ஆண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

அதன்பின் பலியிடப்பட்ட ஆடுகள் அனைத்தும் கோவில் வளாகத்தில் வைத்து சமைக்கப்பட்டன. பின்னர் சமைக்கப்பட்ட ஆட்டுக்கறி சாப்பாடு நேற்று காலையில் அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் வயதான பெண்கள் மற்றும் ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்