நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-02-16 18:45 GMT

நகராட்சி கூட்டம்

நாமக்கல் நகராட்சி கூட்டம் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை கொண்டது. இது 55.24 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1½ லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்கு தற்போது ஜேடர்பாளையத்திலிருந்து புதிய குடிநீர் திட்டம் ரூ.256 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பழைய நகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 23 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைப்பு முழுமையாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விடுப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது நாமக்கல் நகராட்சியின் சொந்த ஆண்டு வருமானம் ரூ.25 கோடியே 64 லட்சம் ஆகும். மேலும், இதர வருமானங்கள் ரூ.19.51 கோடி சேர்த்து மொத்தம் ஆண்டு வருமானம் ரூ.45 கோடியே 15 லட்சம் ஈட்டப்படுகிறது. நகரின் வளர்ச்சி பணிகளுக்காக கடன் மற்றும் மானியம் முறையில் பெறப்பட்ட கடன் தொகைகளுக்கு, உரிய காலத்தில் தவணைகள் முறையாக செலுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

எனவே நாமக்கல் நகராட்சி தற்போதைய பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நிலையில் உள்ளது. நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களின் கீழ் சாலைகள், குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய், திடக்கழிவு மேலாண்மை பற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வாய்ப்பு உள்ளதால், நகரில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதரம் மேம்படுவதுடன், நகரின் அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடையும்.

எனவே தற்போது உள்ள நகரின் பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், நாமக்கல் மாவட்டத்தின் தலை நகரத்தில் அமைந்துள்ள நாமக்கல் நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10 கிராம ஊராட்சிகளை இணைக்க முடிவு

மேலும் தற்போதுள்ள நாமக்கல் நகராட்சியினை சுற்றி சுற்றுவட்டச்சாலை (ரிங்ரோடு) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. சுமார் 23 கி.மீ. நீளம் கொண்டுள்ள ரிங் ரோடு முதலைப்பட்டியில் தொடங்கி, மரூர்ப்பட்டி, வீசாணம், வேட்டாம்பாடி, ரெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்படஉள்ளது.

இதன் மூலம் ரிங் ரோடு பகுதியில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி ஆகிய 10 கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைப்பதின் மூலமாக ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மேம்படுத்த வேண்டும் என மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சுதா, துணைத்தலைவர் பூபதி, கொறடா சிவக்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்