உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பேரூராட்சி தலைவர்கள்
நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
குமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பேரூராட்சி தலைவர்கள் நேற்று மதியம் நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள செயற்பொறியாளர் அறையில் தரையில் அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி பேரூராட்சி தலைவர்களிடம் கேட்டபோது. 'குமரி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியின் கீழ் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற பொதுப்பணித்துறை சார்பில் தடையில்லா சான்று கொடுப்பதில்லை. எனவே பேரூராட்சிகளில் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள தடையில்லா சான்று உடனடியாக வழங்க வேண்டும்' என்றனர்.
பேச்சு வார்த்தை
இந்த போராட்டம் காரணமாக பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேரூராட்சி தலைவர்களிடம் செயற்பொறியாளர் ஜோதி பாசு, நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. அப்போது 15 நாட்களுக்குள் இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து அங்கு நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.