அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி

சீர்காழியில் அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் நகராட்சி மேல்நிலைப்பள்ளியை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-07 18:32 GMT

சீர்காழி:

சீர்காழியில் அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் நகராட்சி மேல்நிலைப்பள்ளியை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதிகள்

சீர்காழி வடக்கு மட வளாகத்தில் சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளி கட்டிடத்தில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ-மாணவிகள் மாடிப்படியிலும், மரத்தடியிலும், பள்ளி வளாகத்திலும், கல்வி பயில வேண்டிய நிலை பல காலமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடங்கள், நூலகம், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சைக்கிள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

வேறு பள்ளிக்கு..

இந்த பள்ளியில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆய்வக தேர்வு, அரசு பொது தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் எழுத வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் விளையாட்டுத்துறையில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகராட்சி மேல்நிலை பள்ளிக்கு புதிதாக வகுப்பறை கட்டிடம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக கட்டிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்களை கட்டித்தர வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

மேலும் செய்திகள்