குடிநீர் திட்ட பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை அரசு திரும்ப பெற வேண்டும் பேரூராட்சி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்
குடிநீர் திட்ட பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை அரசு திரும்ப பெற வேண்டும் என்று பேரூராட்சி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
மந்தாரக்குப்பம்,
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம் மந்தாரக்குப்பம் கங்கைகொண்டானில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் தங்கவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தெரு விளக்கு, குடிநீர் திட்ட பராமரிப்பு, தூய்மை பணி ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைப்பதை அரசு திரும்ப பெற வேண்டும். பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
காலி பணியிடங்கள்
பேரூராட்சியில் நியமனக்குழு வரம்பிற்குட்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பேரூராட்சிக்கு இணையான வருமானம் ஈட்டக்கூடிய ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், துரைராஜ், ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கங்கைகொண்டான் பேரூராட்சி மன்ற ஊழியர் கோபால் நன்றி கூறினார்.