சத்தியமங்கலம் நகராட்சி கூட்டம்; 22 தீர்மானங்கள் நிைறவேற்றம்
சத்தியமங்கலம் நகராட்சி கூட்டம்; 22 தீர்மானங்கள் நிைறவேற்றம்
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் நகராட்சி கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம்
சத்தியமங்கலம் நகராட்சி கூட்டம், அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ரவி, துணைத்தலைவர் ஆர்.நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை நகராட்சி பணியாளர் கவுரி வாசித்தார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
குடிநீர் பிரச்சினை
வேலுச்சாமி (தி.மு.க.):- சத்தி நகர் முழுவதும் புதிதாக போடப்படும் குடிநீர் குழாய்கள் நல்ல தரமாக இருக்க வேண்டும்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி;- நீண்ட காலம் உழைக்கக்கூடிய நல்ல குழாய்கள் நமது நகராட்சி பொறியாளர்கள் முன்னிலையில் போடப்படும்.
லட்சுமணன் (அ.தி.மு.க.):- சத்தி நகரில் உள்ள 27 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளது. இதை எல்லாம் எப்போது சரி செய்ய போகிறீர்கள்.
தலைவர் ஆர்.ஜானகிராமசாமி:- நான் பலமுறை கூறி உள்ளேன். உங்கள் வார்டில் உள்ள பிரச்சினைகளை பற்றி மட்டும் கூறுங்கள். எல்லா வார்டுகளிலும் நீங்கள் தலையிட வேண்டாம். குடிநீர் பிரச்சினை புதிய திட்டத்தின் மூலம் சரி செய்யப்படும்.
பேபி (தி.மு.க.):- எனது வார்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. ஆனால் குடிநீர் கிடைக்க வழி செய்யவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் 70 குடும்பத்தினர் சிரமப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதிக்கு ஆற்று குடிநீரும் குறைந்த அளவே கிடைத்து வருகிறது. எனவே அந்த பகுதியில் முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் விளக்கு
ஆணையாளர் ரவி:- விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநாவுக்கரசு (பா.ம.க.):- எனது வார்டில் 5 தெருக்களுக்கு மின் விளக்கு வசதி இல்லை. தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் ஆர்.ஜானகிராமசாமி:- விரைவில் தெருவிளக்கு அமைக்கப்படும்.
சீனிவாசன் (தி.மு.க.):- எனது வார்டில் எஸ்.ஆர்.டி. சந்திப்பு உள்ள பகுதியில் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. மேலும் நகராட்சி பள்ளிகளில், நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்வதில்லை என புகார்கள் வருகின்றன.
நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி:- அந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பது தெரியும். இதற்காக மேட்டுப்பாளையம் ரோட்டில் திருநகர் காலனி பகுதியில் மேல்நிலை தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது. இதில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி பணியாளர் வீரப்பன் என்பவர் பணி ஓய்வுபெற்றதை தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழாவும், சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் கூட்ட முடிவில் நடைபெற்றது.
கூட்டத்தில் சுகாதார அலுவலர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.