முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
அக்ராவரம் கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குடியாத்தம் தாலுகா அக்ராவரம் கிராமத்தில் சீவூரான் வீட்டு வகையறாக்கள் மற்றும் சந்திவீட்டு வகையறாக்கள் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனீஸ்வரர், நாகதேவதை, காலபைரவர் ஆகிய சாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, கலச அலங்காரம், வாஸ்து பூஜை, பிரவேச பலி, அங்குரார்பணம், யாகசாலை பூஜை, தம்பதி சங்கல்பம், பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முனீஸ்வரருக்கும், நாக தேவதைக்கும், காலபைரவருக்கும் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கு எம்.ரவி தலைமை தாங்கினார். பெரியதனக்காரர் கே.குப்புசாமி, நாட்டாண்மை எஸ்.நாகராஜன், கே.கேசவன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.மனோகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி.தமிழரசி பிரபாகரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.