சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது.

Update: 2022-06-10 20:35 GMT

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்றது. இந்த கோபுரத்தில் ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிற்பங்களுக்கு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றது.

இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ராஜகோபுரத்தின் தரை தளத்தில் இருந்து 7 நிலைகள் வரை ஆயிரக்கணக்கான சவுக்குக் கட்டைகளால் கட்டப்பட்ட சாரம் பிரிக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரத்தின் முன்பு யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் கொடிமரத்திற்கு முன்பு முகூர்த்தக்காலுக்கு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, ராஜகோபுர உபயதாரர்கள் பொன்னர், சங்கர், கோவில் அலுவலக பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்