திருவானைக்காவல், திருப்பைஞ்சீலி கோவில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம்

திருவானைக்காவல், திருப்பைஞ்சீலி கோவில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நடைபெற்றது.

Update: 2023-08-26 19:41 GMT

திருவானைக்காவல், திருப்பைஞ்சீலி கோவில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நடைபெற்றது.

ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில்

பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி நேற்று மாலை 5.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் வெள்ளி குதிரை வாகனத்திலும் உற்சவர் அகிலாண்டேஸ்வரி பல்லக்கிலும் கோவிலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் திருவானைக்காவல் வெள்ளிக்கிழமைசாலை அருகே உள்ள திருமஞ்சன காவிரி கரையை வந்தடைந்தனர்.

அங்கு திருசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பிட்டுக்கு மண் சுமக்கும் வைபவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பைஞ்சீலி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கோவிலில் நீலிவனநாதருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நீலிவனநாதர் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து கோவிலின் வடக்கு பிரகாரத்தில் வைகை அணையை போன்று தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த இடத்தில் எழுந்தருளினார்.

அதைத்தொடர்ந்து, அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்த அணையை உடைத்து மீண்டும் அதை சரி செய்வது போன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த வரலாற்றினை ஓதுவார்கள் அங்கு கூடியிருந்த பக்தர்களிடையே விளக்கிக் கூறினார்கள். தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மனோகரன், கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்