திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் வசதி -நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொண்டி,
திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
திருவாடானையில் ஒன்றிய நாம் தமிழர் கட்சி மற்றும் மகளிர் பாசறை சார்பில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க மறுத்த மத்திய பா.ஜனதா அரசு மற்றும் மணிப்பூர் பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஓரியூர் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி மாவட்ட பொருளாளர் ஓரிக்கோட்டை காளீஸ்வரன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் மண்டல பொறுப்பாளர் குமரன், மாவட்ட செயலாளர் கண்இளங்கோவன், மாவட்டத்தலைவர் நாகூர் கனி, ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியினர் மகளிர் பாசறையினர் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய, மாநில பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் வசதி
ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:- திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மீட்டு தர வேண்டும். திருவாடானை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், மருத்துவர்கள் செவிலியர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதியும், பிரேத பரிசோதனை அறையை சீரமைத்து குளிரூட்டப்பட்ட பிரேத பரிசோதனையாக அமைத்து தர வேண்டும். எம்.ஆர்.ஐ. சி.டி. ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும்.
திருவாடானையில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் சாதாரண மக்கள் வங்கி சேவையை பெறுவதற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே இங்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை-தோட்டாமங்கலம் செல்லும் தார் சாலை சேதமடைந்து விட்டதால் புதிய தார் சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானையில் காவல் துறையினருக்கு குடியிருப்பு வசதி, டி. நாகனி தெற்கு குடியிருப்பு சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டாமங்கலம் செல்லும் சாலையில் சூச்சனி தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்தாய்வு கூட்டம்
ஆர்ப்பாட்டத்தில் அம்மன் ராஜேந்திரன், செல்வராஜ், மணிகண்டன், கிடங்கூர் பழனி, தங்கவேலு, சகாபுதீன், கார்த்திக், டேனியல், சங்கர், கவுதம் வினோத், உதய நாராயணன், அறிவழகன், முருகேசன், மற்றும் நாம் தமிழர் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மகளிர் பாசறை செயலாளர் டெய்சி அருள்ஜோதி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து திருவாடானை தொகுதி, ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் பி.எம்.ஆர். மகாலில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற தொகுதி அளவிலான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.