எம்.ஆர்.சி. ராணுவ மைய 264-வது தின விழா
எம்.ஆர்.சி. ராணுவ மைய 264-வது தின விழா நடந்தது.
குன்னூர்,
கடந்த 1758-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் (எம்.ஆர்.சி.) உருவாக்கப்பட்டது. கடந்த 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குன்னூர் அருகே வெலிங்டனில் நாகேஸ் பேரக்சில் எம்.ஆர்.சி. ராணுவ மையம் அமைக்கப்பட்டது. நாட்டில் எம்.ஆர்.சி. ராணுவ மையம் உருவாகி 2½ நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. போர் பயிற்சி மட்டுமின்றி விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்து உள்ளது. மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரின் 264-வது தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி போரில் தங்களது இன்னுயிரை நீத்த போர் வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு முன்பு போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.எம்.ஆர்.சி. ராணுவ மையம் கமாண்டெண்ட் பிரிகேடியர் சுனில்குமார் யாதவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மூத்த ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணுவ அதிகாரிகள் வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசினர். தொடர்ந்து நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர்கள் பாராட்டப்பட்டனர்.