குமரியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டருடன் எம்.பி.க்கள் ஆலோசனை

ராகுல்காந்தி வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டருடன் எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

Update: 2022-08-25 15:33 GMT

நாகர்கோவில்:

ராகுல்காந்தி வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டருடன் எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

ராகுல்காந்தி பாதயாத்திரை

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரை வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது. இதையொட்டி அன்று கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேரில் வந்து கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டனர். பாதயாத்திரையையொட்டி காங்கிரஸ் எம்.பி.க்கள் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசாரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

3-வது நாளாக எம்.பி.க்கள் ஆய்வு

இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய்வசந்த் மற்றும் மாநிலச் செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், மாவட்ட தலைவர்கள் உதயம், பினுலால் சிங் ஆகியோர் கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் இடங்களை எம்.பி.க்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் ஆகியோர் கலெக்டர் அரவிந்தை சந்தித்து ராகுல் காந்தி வருகை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இந்திய மக்களின் ஒற்றுமை

பின்னர் ஜோதிமணி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து பாதயாத்திரை‌ மேற்கொள்கிறார். இந்தியா முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு 5 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீர் சென்றடைவார்.

இந்த பாதயாத்திரை மதம், ஜாதி, இன ரீதியாக பிரித்தாளுகின்ற சில அமைப்புகள் மற்றும் கட்சிக்கு எதிராக நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பா.ஜனதாவிற்கு எதிரானவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இந்தியாவில் தற்போது வேலை வாய்ப்பு இன்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை அதிகரித்து உள்ளது‌.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்