திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இயக்க பிரசார புத்தகங்களை வைக்கக்கூடாது-அர்ஜூன் சம்பத் பேட்டி

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இயக்க பிரசார புத்தகங்களை வைக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Update: 2023-08-02 19:03 GMT

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், "மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் தொடர்பாக தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களது செயல்பாடுகள் இறையாண்மைக்கு எதிராக உள்ளன. அவர்களது பிரசாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் திண்டுக்கல்லில் தேசபக்தர்களின் மனம் புண்படும்படியான நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், "திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புத்தகச்சுவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு புத்தகங்களை நன்கொடையாக கொடுக்கலாம். தேவைப்படுபவர்கள் எடுத்து செல்லலாம். இந்த திட்டம் வரவேற்புக்குரியது. ஆனால் இங்கு திராவிட இயக்கம் தொடர்பான புத்தகங்களையும், கம்யூனிஸ்டு புத்தகங்களையும் வைத்து இயக்க பிரசாரத்துக்காக பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக பிரதமர் மோடி, இந்துத்துவா கொள்கைகளை விமர்சிக்கும் புத்தகங்களை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வைத்துள்ளார்கள். கலெக்டர் அலுவலகம் பொதுவான இடம். இங்கு இவ்வாறான புத்தகங்களை வைக்ககூடாது. ஆகவே இதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்