தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கம்

கண்ணமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-10-28 17:02 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பராமரிப்பு பணி

வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் கண்ணமங்கலம் ரெயில்வே கேட் வழியாக செல்கின்றன.

இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் கண்ணமங்கலம் ரெயில்வே ேகட் பகுதியில் தண்டவாள (டிராக்) பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இதனால் ரெயில்வே கேட் இருபக்கமும் தடுப்புகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டன.

இதனை அறியாமல் வந்த வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

மேலும் திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் கீழ்பள்ளிப்பட்டு, கொங்கராம்பட்டு கேட் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

அதேபோல் வேலூர் நோக்கி வரும் வாகனங்களும் இந்த வழியாக இயக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் சிறிய சாலையில் சென்று வர பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.

சீரமைப்பு பணி மாலை 5 மணி வரை நடைபெற்றதால் கிராமங்கள் செல்ல வேண்டிய டவுன் பஸ்கள் இயக்கவில்லை.

பொதுமக்கள் அவதி

இதனால் கிராம மக்கள் ஏராளமானோர் கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்ற மடைந்தனர். சில பஸ்கள் ஒண்ணுபுரம், புதுப்பாளையம் வழியாக ஆரணி ரோட்டில் வேலூர் சென்றன.

ரெயில்வே துறையினர் முறைப்படி அறிவிப்பு செய்யவில்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் கூறியுள்ளோம் என்று ரெயில்வே துறை சார்பில் கூறப்பட்டது.

ஆனால் முறைப்படி எவ்வித அறிவிப்பும் பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் செய்யக்கூடாது. பொதுமக்கள் நலன்கருதி ரெயில்வே நிர்வாகம் முறைப்படி இப்பணிகளை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இனிவரும் காலங்களில் இது போன்ற பணிகளை இரவு நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் செய்ய வேண்டியது ரெயில்வே துறையினர் கடமையாகும். பொதுமக்களுக்கு இடைஞ்சலாக எவ்வித பணிகளும் செய்யக்கூடாது என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்