கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா?; ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டை
கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
மாவோயிஸ்டுகள் ஊடுருவல்
வடமாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் காணப்படுகிறது. மேலும் திடீரென தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். எனவே நாட்டில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மாவோயிஸ்டுகளை முற்றிலும் ஒடுக்கும் வகையில் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் தொல்லை இல்லை.
எனினும் அனைத்து மாவட்டங்களிலும் மாவோயிஸ்டு ஒழிப்பு படை உருவாக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாவோயிஸ்டு ஒழிப்பு படையினர் நவீன ஆயுதங்களை பயன்படுத்துதல், அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்துதல் தொடர்பாக சத்தியமங்கலத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே கேரளாவில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.
தேடுதல் வேட்டை
இதைத் தொடர்ந்து தமிழகம்-கேரள எல்லையில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் மாவோயிஸ்டு ஒழிப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான மாவோயிஸ்டு ஒழிப்பு படையினர் மாதந்தோறும் 15 நாட்கள் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, சிறுமலை உள்பட மலைப்பகுதியில் சுழற்சி முறையில் போலீஸ் ரோந்து சென்று மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருக்கிறதா? என்று சோதனை நடத்துகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதிகளில் ஜி.பி.எஸ். தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
அதோடு மலைக்கிராமங்களில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை அறிந்துகொள்ள போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வருகின்றனர். மலைக்கிராம மக்களை மூளைச்சலவை செய்து மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.