மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்தஅதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்கள் அகற்றம்

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-05-10 18:45 GMT

தூத்துக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 14 மோட்டார் ைசக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை அகற்றியதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து நேற்று அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.

வாகன தணிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இருச்சக்கர வாகனங்களில் விதிகளை மீறி மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பலர் பொருத்தி இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனால் விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி இருச்சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

அதன்பேரில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெலிக்ஸ் மாசிலாமணி, தனபாலன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் போலீசார் தூத்துக்குடி மாநகர பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை முத்தையாபுரம் பல்க் சந்திப்பு, முத்தையாபுரம் ரவுண்டானா, தெர்மல்நகர் சந்திப்பு, குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, 4-ம் கேட், எப்.சி.ஐ ரவுண்டானா, மில்லர்புரம் சந்திப்பு, திரேஸ்புரம் சந்திப்பு, காமராஜ் கல்லூரி சந்திப்பு ஆகிய 9 இடங்களில் திடீர் வாகன தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்த 14 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

அபராதம்

பின்னர் அந்த மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்த சைலன்சர்கள் அகற்றப்பட்டு, அனைத்து வாகனங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.70 ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாகனங்களிலும், மோட்டார் சைக்கிள் வாங்கும் போது பொருத்தப்பட்டு இருந்த ஒரிஜினல் சைலன்சர்களை பொருத்தி வாகனங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் அதில் இருந்து அகற்றப்பட்ட சைலன்சர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்களின் உரிமையாளர்களை நேரில் சந்தித்து அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து இதுபோன்ற சைலன்சர்களை பொருத்தினால் வாகனங்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மாலையிலும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸார் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி விதிகளை மீறி சைலன்சர் பொருத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்