என்ஜின் கோளாறால் மலை ரெயில் நடுவழியில் நிறுத்தம்

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே என்ஜின் கோளாறு காரணமாக மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் 4 மணி நேரம் சுற்றுலா பயணிகள் நடுக்காட்டில் காத்திருந்து அவதியடைந்தனர்.

Update: 2022-10-25 18:45 GMT

ஊட்டி, 

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே என்ஜின் கோளாறு காரணமாக மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் 4 மணி நேரம் சுற்றுலா பயணிகள் நடுக்காட்டில் காத்திருந்து அவதியடைந்தனர்.

மலை ரெயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து முதல் ஊட்டிக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. மலை ரெயிலில் பயணிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். பயணத்தின் போது நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயிலில் இயங்கும் எக்ஸ் கிளாஸ் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுகிறது. இந்தநிலையில நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டது. காலை 10 மணிக்கு குன்னூர் வர வேண்டிய மலை ரெயில் என்ஜின் கோளாறு காரணமாக ஆடர்லி அருகே நிறுத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகள் அவதி

என்ஜின் அருகே சக்கரத்தின் ராடு ஒன்றில் நிக்கல் பின் கழன்று விழுந்ததால் இந்த கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து குன்னூர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் பணிமனையில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் அங்கு சென்று, என்ஜினை பழுது பார்த்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மலை ரெயில் 4 மணி நேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.

முன்னதாக ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால், முதல் ஒரு மணி நேரம் சுற்றுலா பயணிகள் அப்பகுதியை சுற்றி பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், உணவு, தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர்.

கேன்டீன் வசதி

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ஊட்டி மலை ரெயிலில் காடுகள் வழியாக பயணிக்கும் போது புதுவித அனுபவம் ஏற்படுகிறது. குறிப்பாக குகைகள் வழியாக பயணிக்கும் போது பிரமிப்பு உண்டாகிறது. ஆனால், மலை ரெயில் பழுதானதால் நடுக்காட்டில் தவித்தோம். இதனால் 4 மணி நேரம் ரெயில் தாமதமானதால், ஒரு நாள் இங்கேயே கழிந்து விட்டது. குறிப்பாக குழந்தைகளுடன் வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஹில்குரோவ், குன்னூர் ரெயில் நிலையங்களில் கேன்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்