குண்டும் குழியுமான சாலையால் விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்

திருச்சி ஜங்ஷன்-பஸ் நிலையம் இடையே குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-24 19:35 GMT

திருச்சி ஜங்ஷன்-பஸ் நிலையம் இடையே குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், அரியமங்கலம் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு விஞ்ஞான முறையில் தீர்வு காணும் பணி, உய்யகொண்டான் கால்வாய் கரையை மேம்படுத்தும் பணி, தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி, சத்திரம் பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் திருச்சி நகரின் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. நகரின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு செல்லும் ராக்கின்ஸ் சாலை மேடு பள்ளமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலை வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இந்த வழியில் சமீபத்தில் புதிதாக சாலை போடப்பட்டது. பின்னர் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டது. பின்னர் அந்த சாலையை மாநகராட்சி சரிவர மூடாமல் கிடப்பில் போட்டுள்ளது.

இது பற்றி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குண்டும் குழியுமான சாலை

மிளகுபாறை பகுதியை சேந்த சுப்பையா:- நான் கடந்த 56 வருடங்களாக இந்த ராக்கின்ஸ் சாலை பகுதியில் காலணிகள் விற்பனை செய்து வருகிறேன். கடந்த 8 மாதத்திற்கு முன்பு இந்த ராக்கின்ஸ் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. இதில் தொடர்ந்து சரியான பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. அவர்கள் சாலையில் தட்டுத்தடுமாறி கீழே விழும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதற்கு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழ வியாபாரி நாகராஜ்:- இந்த ராக்கின்ஸ் சாலையில் கடந்த 7 வருடங்களாக பழ வியாபாரம் செய்து வருகிறேன். இந்த சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் இன்னல்களை சந்திக்கின்றனர். இங்கு புழுதி காற்று வீசுவதால் வியாபாரம் பாதிப்படைகிறது. மேலும் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையில் இல்லை்.

போக்குவரத்து பாதிப்பு

பூ வியாபாரி அங்காயி:-, பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று சரியாக பராமரிக்காமல் இருப்பதால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் திலீப்குமார்:- இந்த சாலை ரெயில்வே நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலை ஆகும். இந்த சாலை மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதில் காலை நேரத்தில் கழிவு நீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. திருச்சி மாநகரின் முக்கிய பகுதியாக காணப்படும் இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.

தோண்டுவதும், மூடுவதுமாக...

திருச்சி ஆர்.டி.மலை பகுதியை சேர்ந்த ராஜா:- நான் ரெயில்வே ஜங்சன் பகுதியில் 25 வருடங்களாக கடை நடத்தி வருகிறேன். இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுக்கு முன்புதான் சாலை போடப்பட்டது. அதற்கு பின்னர் சாலைகள் சரிவர போடவில்லை. பாதாள சாக்கடை பணிகளால் இந்த சாலையை தோண்டுவதும், பின்னர் மூடுவதுமாக உள்ளனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிளில் செல்வோர் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். இந்த சாலையின் நிலைமை குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

டெண்டர் விரைவில்...

திருச்சி நகரில் 49 கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை மேம்படுத்த ரூ.42.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக சாலை மேம்பாட்டு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நீர் வெளியேற்று வசதி கொண்ட ஸ்மார்ட் சாலைகள் அமைக்கப்படுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ஸ்மார்ட் சாலை திட்டம் கைவிடப்பட்டு 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 25 வார்டுகளில் சாலைகளை மேம்படுத்த திருச்சி மாநகராட்சி திட்டம் தீட்டியுள்ளது. மழைநீர் வடிகால்கள் அமைத்தல். சிமெண்டு கான்கிரீட் சாலைகள், சிறு மதகுகள் அமைத்தல். உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகளுக்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக திருச்சி மாநகராட்சியின் பொறியியல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்