போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
கோவை சிந்தாமணி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கோவை
கோவை சிந்தாமணி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
போலீசார் நடவடிக்கை
தொழில் நகரமான கோவைக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப வசதிகள் இல்லாததால் மாநகர பகுதியில் ஆங்காங்கே தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
போக்குவரத்து மாற்றம்
அதன்படி மாநகர பகுதியில் பல்வேறு சிக்னல்கள் அகற்றப்பட்டு அங்கு ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சிக்னல், புரூக் பாண்ட் சாலையில் உள்ள சிக்னல், லாலி ரோடு சிக்னல், சிங்காநல்லூர் சிக்னல் உள்பட 32 பகுதிகளில் உள்ள சிக்னல்கள் அகற்றப்பட்டு உள்ளன. இதில் சில இடங்களில் ரவுண்டானா அமைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோன்று அவினாசி சாலையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் சில இடங்களில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாகன ஓட்டிகள் சென்று வருகிறார்கள். ஆனால் சில இடங்களில் சிலர் செய்யும் தவறு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று மதியம் 2 மணியளவில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சிந்தாமணி ரவுண்டானா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு காத்து நின்றதை பார்க்க முடிந்தது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கடும் போக்குவரத்து நெரிசல்
கோவை மாநகர பகுதியில் பல இடங்களில் சிக்னலில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் காத்திருக்காமல் செல்ல முடிகிறது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதில் சில இடங்களில் போலீசார் நியமிக்கப்படவில்லை. இதனால் சில வாகன ஓட்டிகள் தாறுமாறாக வருவதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது.
குறிப்பாக நேற்று சிந்தாமணி சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிந்தாமணி ரவுண்டானாவில் இருந்து வடகோவை மேம்பாலம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. எனவே இதுபோன்று வாகனங்கள் அதிகமாக செல்லும் இடத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்து அவர்கள் சரியான முறையில் கண்காணித்தால் நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்காது.
தக்க நடவடிக்கை
மேலும் நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி வாகனங்கள் அதிகளவில் செல்லும் என்பதால் இன்னும் அதிகமாகதான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.