காட்டு யானைகளை தொந்தரவு செய்த வாகன ஓட்டிகள்

மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2023-02-07 18:45 GMT

ஊட்டி, 

மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

காட்டு யானைகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் 47 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டம் உள்ளதால், புலி, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாலை 6 மணியளவில் கோவையில் இருந்து மஞ்சூருக்கு செல்லும் கடைசி பஸ்சை அவ்வப்போது காட்டு யானைகள் வழிமறித்து வந்தன. மேலும் 2 மாத காலமாக கெத்தை பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் சாலையில் ஒய்யாரமாக உலா வந்தன. கூட்டத்தில் உள்ள குட்டி யானை சாலையில் அங்கும், இங்கும் ஓடி திரிந்து வருகிறது.

யானைகளுக்கு தொந்தரவு

இந்தநிலையில் கெத்தை மாரியம்மன் கோவில் அருகே காட்டு யானை கூட்டம் முகாமிட்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காட்டு யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை முன்னோக்கி, பின்னோக்கி இயக்கியும், புகைப்படம் எடுத்தும் தொந்தரவு செய்தனர். இதனால் யானைகள் காரை தாக்குவதற்காக ஓடி வந்தன. பின்னர் கார் வேகமாக சென்றது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் பசுமையாக காணப்படும் வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. மேலும் காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கக் கூடாது. அதேபோல் அதிகமாக சத்தம் எழுப்பி யானைகளை அச்சுறுத்தக் கூடாது. குறிப்பாக யானைகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களில் சாலையை கடக்க முயற்சி செய்யக்கூடாது. யானைகள் சென்ற பின்னர் தான் சாலையை கடக்க வேண்டும். யானைகளுக்கு இடையூறு செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்