சாலையோரம் நின்ற காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையோரம் நின்ற காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
பந்தலூர்: பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் தினமும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்து வருகிறது. மேலும் மழவன் சேரம்பாடியில் இருந்து கொளப்பள்ளி, பந்தலூர், கூடலூர், அய்யன்கொல்லி செல்லும் வாகனங்களையும் வழிமறித்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டு யானை புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள்பீதி அடைந்தனர். இதையறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் விரைந்து சென்று காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்த நிலையில் நேற்று காலை மழவன்சேரம்பாடியில் இருந்து காவயல் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு காட்டுயானை முகாமிட்டு சுற்றித்திரிந்தது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் நடந்துசென்றனர். பின்னர் சிறிதுநேரத்தில் காட்டுயானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.