கூடுவாஞ்சேரி காந்தி பூங்காவில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

கூடுவாஞ்சேரி காந்தி பூங்காவில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடு போல் கிடந்தது.

Update: 2023-05-30 09:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட பாலாஜி அவென்யூ அருகே நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடுவதும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதும் வழக்கம் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழக்கம்போல் பூங்காவுக்கு நடைபயிற்சி செல்வதற்காக போகும்போது பூங்காவில் விலை உயர்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடு போல் கிடந்தது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு பூங்காவில் வாலிபர்கள் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதா? அல்லது வேறு எங்கேயாவது திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை எரித்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

இந்த பூங்காவில் தினந்தோறும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் ஒன்று சேர்ந்து மது குடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து பலமுறை கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அந்த பூங்காவில் மது குடிக்கும் வாலிபர்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளும் போலீசார் எடுக்கவில்லை, எனவே கூடுவாஞ்சேரி போலீசார் பாலாஜி அவென்யூ, காந்தி பூங்கா ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு பூங்காவில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்